
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18 – செபராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள 24 மணி நேரக் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறலால் 4 மாதக் குழந்தை உயிரிழந்தது.
அந்த குழந்தையின் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் அஜிசி இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் மீதான விசாரணை அறிக்கை அரசாங்க துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பு ,பல முக்கிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளதால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
ஹைல் ஹாரித் ஷபாயீஸ் ( Hayl Haarith Syafaeez ) என அடையாளம் கூறப்பட்ட அந்த குழந்தை, மார்ச் 9 ஆம் தேதி அதிகாலையில் அந்தக் காப்பகத்தில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிவந்த அக்குழந்தையின் தாயான 30 வயதுடைய உம்மு ஹபீபாவிடம் (Ummu Habibah Wahab ) அதிகாலை 4 மணியளவில் அவரது மகனின் உடல் நீல நிறமாக மாறியதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அக்குழந்தை உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அக்குழந்தை இறந்தது.
அக்குழந்தை மரணம் தொடர்பில் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் அதே நாளில் கைது செய்யப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்கான விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டனர்.



