
கர்நாடகா, ஜூலை 16 – நேற்று, கர்நாடகா மாநிலத்தில், முதலைகள் உலாவும் ஆற்றின் நடுவே இருக்கும் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்த ஆடவர் ஒருவர் உதவி கேட்டு அலறியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை கயிறு கட்டி இழுத்து வெற்றிகரமாக காப்பாற்றும் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஆற்றிலிருந்து வெளியே வந்ததும் முதல் வேளையாக அங்கு நின்றுக்கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்து, ‘என்னை வேண்டுமென்றே நீ ஆற்றில் தள்ளிவிட்டாய்’ என்று அந்நபர் கத்த தொடங்கிவிட்டார்.
ஆற்று பாலத்தின் அருகே நின்று தன்னை செல்பீ எடுக்க வற்புறுத்திய தனது மனைவி தன்னை திட்டமிட்டு ஆற்றில் தள்ளிவிட்டாள் எனும் கடுமையான குற்றச்சாட்டை அந்த இளைஞர் முன்வைத்துள்ளார்.
இதற்கிடையில், தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் தனது கணவர் ஆற்றில் தவறி விழுந்தார் என்றும் அப்பெண் குறிப்பிட்டுள்ளதைத் தொடர்ந்து கூடிய விரைவில் உண்மை வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில், கணவருடன் தேனிலவுக்குச் சென்ற புதுமணப்பெண்ணொருவர், தனது சொந்த கணவரையே கூலிப்படை வைத்து கொன்ற சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.