பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 – சையின் ரயான் மரணம் தொடர்பான புகைப்படங்களும், இதர தகவல்களும் சமூக ஊடகத்தில் கசிந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில், போலீசாரிடமிருந்து இன்னும் எந்த ஒரு பதிலையும் தமது தரப்பு பெறவில்லை என அவரது பெற்றோரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
29 வயது Zaim Ikhwan Zahari மற்றும் 29 வயது Ismanira Abdul Manaf ஆகிய இருவரையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர், சையின் ரயான் கொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட டெலிகிராம் கணக்கிற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், அந்த டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், இதர தகவல்களும் உண்மையானவையா என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றார்.
இதுவரை அது தொடர்பில், போலீசாரிடமிருந்தும் தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்தப்பட்டதா? தேசிய சட்டத் துறை அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதா? எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டார்.
அதனால், சையின் ராயனின் சவப் பரிசோதனை புகைப்படங்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவது குறித்து, தமது தரப்பு இன்னும் இரண்டாவது போலீஸ் புகார் செய்யவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
இன்று தான் சவப் பரிசோதனை தொடர்பான புகைப்படங்கள் கிடைத்துள்ள வேளை ; கசிந்த படங்கள் உண்மையானவையா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
அதன் பின்னர், சையின் ரயானின் பெற்றோர்களுடன் கலந்தாலோசனை நடத்தி போலீஸ் புகார் செய்ய வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவுச் செய்யப்படும்.
ஜூன் 13-ஆம் தேதி, அலட்சியம் காரணமாக சையின் ரயானுக்கு காயம் விளைவித்ததாக, அவனது பெற்றோருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு அடுத்த நாள், சையின் ரயானின் புகைப்படங்கள் டெலிகிராமில் கசிந்த விவகாரம் தொடர்பில், அவரது குடும்பத்தார் போலீஸ் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.