உலுசிலாங்கூர், ஆகஸ்ட் 6 – சிலாங்கூர் மாநிலத்தின் கெர்லிங் நகரில் அரசு அங்கீகாரத்தோடு அமையவிருக்கும் சைவத் திருக்கோயில் மற்றும் கல்லூரித் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
ஆன்மீகக் கல்வியின் வழி மலேசிய இந்தியச் சமூகத்திற்குள் சைவ சமயத்தை புத்துயிர் பெற வைக்கும் நோக்கத்துடன் 2011-யில் மலேசியச் சைவ சமய பேரவை நிறுவப்பட்டது.
இந்த அமைப்பு, வாரந்தோறும் சைவ சித்தாந்த வகுப்புகள், மாத இதழ் வெளியிடுவது, ஆண்டுதோறும் சமய முகாம்கள் மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், மலேசியாவின் முதல் சைவ இந்து கல்வி அகாடமியை உருவாக்க வேண்டும் எனும் வேட்கையில், சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கியதாக அதன் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த லட்சியத் திட்டத்தில் சிவன் கோயில், பல்நோக்கு அரங்கம், திருமண மண்டபம், தியானக் குடில்கள், கல்வி வசதிகளை ஆகியவை இடம்பெறும்.
இத்திட்டம் மூன்று கட்டடங்களாக நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி சைவ ஆகமங்கள்படி நடைபெறும் என்று கூறினார்.
பொதுமக்கள் யாவரும் ஒன்றுகூடி இந்த அடிக்கல் நாட்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் வரவேற்கப்படுகின்றனர்.
அதேவேலையில், நிலத்தில் திருக்கோயில் மற்றும் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், தங்கு தடையின்றி உரியக் காலத்தில் நிறைவடைய இந்து குடும்பங்கள் ஒன்றிணைந்து நன்கொடைகள் வழங்கவும் முனைவர் நாகப்பன் கேட்டுக்கொண்டார்.