
புது டெல்லி, ஜூலை-13- இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது சொந்தத் தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை மற்றும் சமூக அழுத்தமே அக்கொலைக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.
25 வயது ராதிகா இந்திய டென்னிஸ் அணியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் விளையாடி வந்தார்; அண்மையில் பயிற்சியாளராகவும் மாறினார்.
இந்நிலையில் புது டெல்லியில் டென்னிஸ் பயிற்சி மையமொன்றை ராதிகா நடத்தி வந்தது, தந்தை தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.
தவிர, மகளின் வருமானத்தை நம்பியிருக்கும் தந்தை என ஊர் மக்கள் தன்னை கிண்டலடித்து வந்ததும் அவருக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் டென்னிஸ் பயிற்சி மையத்தை மூடிவிடுமாறு மகளை பலமுறை அவர் வற்புறுத்தியுள்ளார்; ஆனால் ராதிகா கேட்கவில்லை.
இதனால் ‘பொறுமையிழந்த’ தீபக், வியாழக்கிழமையன்று வீட்டிலேயே தன் மகளை பின்னாலிருந்து 3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
ராதிகாவின் சித்தப்பா போலீஸில் புகார் செய்த, தீபக் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார். மகளைக் கொலைச் செய்ததை அவர் ஒப்புக் கொண்ட நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணைத் தொடருகிறது.
தேசிய மற்றும் அனைத்துலக அளவில் டென்னிஸ் விளையாடி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்ந்த சொந்த மகளை, ஊரார் பேச்சுக்கு செவி சாய்த்து தந்தையே ஆணவக் கொலைச் செய்துள்ளார்; இதுவும் ஒருவித ஆணாதிக்கமே என இந்திய வலைத்தளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.