Latestமலேசியா

ஜப்பானுக்கு 3 யானைகள் இடமாற்றம்: MACC விசாரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன்-5,

மலேசியாவிலிருந்து ஜப்பானுக்கு 3 யானைகள் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

தாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகிய அம்மூன்று யானைகள் ஜப்பானின் ஒசாகாவில் உள்ள தென்னோஜி விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டதில் பல சந்தேகங்கள் இருப்பதாக PEKA என்ற அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

​அநாமதேய நபர் மூலம் தங்களுக்கு கிடைத்த ஆவணங்களின்படி, இந்த யானைகள் காப்பகத்தில் பிறந்தவை அல்ல, மாறாக காட்டில் இருந்து பிடிக்கப்பட்டவை என்று அதன் குறியீடுகள் காட்டுவதாக பெக்கா அமைப்பின் தலைவர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சொத்தாகக் கருதப்படும் காட்டு யானைகளை அவ்வாறு எளிதாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

​மேலும், இந்த யானைகள் தைப்பிங் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான மருத்துவ ஆவணங்களில் பஹாங் மாநில கால்நடை அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எனவே, இந்த யானைகளின் இடமாற்றத்தில் ஏதேனும் ஊழல் அல்லது சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் நடந்துள்ளதா என்பது குறித்து MACC உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என PEKA சார்பில் ராஜேஷ் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!