
கோலாலம்பூர், ஜூன்-17– கோலாலம்பூர் ஜாலான் கெப்போங்கில் (Jalan Kepong) ஆபத்தான முறையில் ஓட்டப்பட்ட சிவப்பு நிற புரோட்டான் அரூஸ் (Proton Aruz) கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 6 ஆம் தேதி, 26 வயதுடைய ஓட்டுநர் காரின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சறுக்கி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. டயர்கள் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே நாள் ரோந்து பணியில் இருந்த செந்தூல் போலீசார், ஆபத்தான முறையில் ஓட்டப்பட்ட அதே வாகனத்தை ஜின்ஜாங் உத்தாராவில் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த ஓட்டுநருக்கு குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும் போதைப்பொருள் பரிசோதனையிலும் எதிர்மறை முடிவு கிடைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேல் விசாரணைக்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான வைரல் காணொளியும் இதே விபத்துடன் தொடர்புடையது என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.



