Latestஇந்தியா

ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; தமிழகத்தில் பெரும் பரபரப்பு

சென்னையின் பிரபல தொழிலதிபரும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனருமான 84 வயது ஆர். வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு விஸ்வரூபமாகி தமிழகத்தில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உதவி செய்வதாக ஆசைக்காட்டி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தமது செல்வாக்கின் வழி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் அதனை மூடி மறைத்துவிட்டதாக வீரமணிக்கு எதிராக தற்போது பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.

அவரின் லீலைகள் 20 ஆண்டுகளுக்கும் முன்பே தொடங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில் எப்படி அச்சமபவம் வெளிச்சத்துக்கு வராமல் போனது எனும் கேள்வி பொதுவெளியில் எழுந்துள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான காணொளி 2024 நவம்பரில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை ஏதும்
எடுக்கப்படவில்லை. மீண்டும் இன்னொரு புகார் வந்த நிலையில் 2025 அக்டோபரில்தான் FIR பதிவு செய்யப்பட்டது. காணொளியில் இடம்பெற்ற சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி, காவல்துறை பின்னர் வழக்கை முடிக்க முயன்றது. ஆனால், சிறப்பு போக்சோ (POCSO) நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்து, முழுமையான மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணை மீண்டும் தீவிரமான பிறகு, வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது, அசல் காணொளியில் இருந்த பெண் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமிகளாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறைந்தது ஒன்பது பெண்கள் முன்வந்துள்ளதாக விசாரணைத் தகவல்கள் கூறுகின்றன. இதில் ஏழு கூடுதல் சிறுமிகள் தொடர்பான வாக்குமூலங்கள் முன்னதாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை மூடிமறைக்க பணம் பயன்படுத்தப்பட்டதா என்பதும் இப்போது முக்கிய விசாரணைக் கோணமாகியுள்ளது. சுமார் ₹90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள், காவல்துறையினர் மற்றும் பிற தொடர்புடையோருக்குப் பணம் சென்றதா என்ற சந்தேகம் ஆகியவை ஆராயப்படுகின்றன.

அரசியல் தொடர்புடையோருக்கும் சில ஊடகப் பிரமுகர்களுக்கும் இணைப்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் விசாரணையில் உள்ளன.

ஆளும் TVK அரசும் முன்னாள் DMK அரசும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. DMK ஆட்சியில் வழக்கு ஒடுக்கப்பட்டதாக TVK தரப்பு கூறுகிறது; தங்கள் ஆட்சியில்தான் FIR பதிவு செய்யப்பட்டது என்றும் ஆனால் காணொளி தெளிவாகத் தெரியவில்லை எனவும் முன்னால் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இக்கொடூரச் சம்பவம் TVK–DMK அரசியல் மோதலாக மட்டும் மாறக்கூடாது. உண்மையான கேள்வி ஒன்று தான்: சிறுமிகளின் குரல் ஏன் இத்தனை காலம் கேட்கப்படவில்லை? குற்றவாளி மட்டுமல்ல; ஆதாரங்களை மறைத்தவர், விசாரணையை தாமதப்படுத்தியவர், பணம் மூலம் செல்வாக்கு செலுத்த முயன்றவர் என யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!