ஜொகூர் பாரு, ஏப்ரல் 6 – ஜொகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் (BSI) ஓர் ஆடவரை பணம் கேட்டு மிரட்டிய சந்தேகத்தில் இரு போலீஸ்காரர்கள் கைதாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரிடம் இருந்து நேற்று நண்பகல் வாக்கில் புகார் கிடைத்ததை அடுத்து, 32 மற்றும் 33 வயதுடைய அவ்விருவரும் கைதானதாக மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் கூறினார்.
Lim என மட்டுமே தம்மை அடையாளம் கூறிக் கொண்ட புகார்தாரர், ஏப்ரல் 2-டாம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
BSI சோதனைச் சாவடியைக் கடக்கும் போது தம்மை நிறுத்திய அவ்விரு போலீஸ்காரர்களும், தமக்கு ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பதாகவும், இரண்டாயிரம் ரிங்கிட்டை கொடுத்தால் கைதுச் செய்யாமல் விட்டு விடுவதாகவும் மிரட்டியதாக 29 வயது Lim சொன்னார்.
தம்மிடம் பணம் இல்லையெனக் கூறியும் கேட்காமல், அருகிலுள்ள சில ATM இயந்திரங்களுக்கு போலீஸ்காரர்களில் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் தாமான் பெலாங்கியில் உள்ள ATM-மில் இருந்து 1,000 ரிங்கிட்டை எடுத்து விட்டு, திடீரென மூச்சுத் திணறியது போல் Lim பாசாங்கு செய்ய, அவ்வழியாக வந்த அவரின் துணையின் உதவியோடு போலீசிடம் இருந்து Lim தப்பியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களைத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் எனக் கூறிய கமிஷ்னர் குமார், நெறி தவறி நடந்துக் கொள்ளும் போலீஸ்காரர்களுக்கு கரசனம் காட்டப்படாது என எச்சரித்தார்.