ஜோகூர் பாரு, மே 23 – ஜோகூர் மாநிலத்தில் ஜோகூர் பாரு, Batu Pahat, Segamat ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 86 வெளிநாட்டினரும் உள்நாட்டைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை தொடங்கி நேற்றுவரை 42 இடங்களில் அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இடைக்கால இயக்குநர் Mohamad Faizal Shamsudin தெரிவித்தார்.
வெளிநாட்டு பிரஜைகளில் பலர் முறையான ஆவணங்களை கொண்டிருக்கவில்லையென பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் அவர்கள் வேலை பெர்மிட் மற்றும் வேலைக்கான பாஸ் கொண்டிருக்கவில்லை என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 19 ஆடவர்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு சிறுமியும் அடங்குவர். மியன்மாரைச் சேர்ந்த 19 ஆடவர்களுடன் மூன்று பெண்கள், 9 வங்காளதேசிகள் , நான்கு பாகிஸ்தான் ஆடவர்கள் மற்றும் ஒரு இந்திய பிரஜையும் அடங்குவர் என Mohamad Faizal தெரிவித்தார். வெளிநாட்டினருக்கு புகலிடம் கொடுத்ததற்காக உள்நாட்டை சேர்ந்த இருவர் 1959ஆம் ஆண்டு மற்றும் 1963ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டத்தின் செக்சன் 56 உட்பிரிவு (1) (d) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர்.