கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஜோகூரிலுள்ள, பாரஸ்ட் சிட்டியில், சூதாட்ட மையத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன், தனது நிறுவனர் டான் ஸ்ரீ வின்சென்ட் டான் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செய்திக்கு எதிராக, பெர்ஜாயா குழுமம் போலீஸ் புகார் செய்துள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில், விரிவான விசாரணை மேற்கொள்ள ஏதுவாக, ஏப்ரல் 26-ஆம் தேதி அந்த புகார் செய்யப்பட்டதாக, பெர்ஜாயா குழுமம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அதன் வாயிலாக, அவ்விவகாரம் தொடர்பில், போலீசார் விரிவான விசாரணையை மேற்கொள்வார்கள் என தமது தரப்பு நம்புவதாக, பெர்ஜாயா குழுமம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, அவ்விவகாரம் தொடர்பில், ப்ளூம்பெர்க் வெளியிட்டிருந்த செய்தியை, பிரதமர் உட்பட பெர்ஜயா குழுமம், கெந்திங் மலேசியா ஆகிய தரப்பினர் மறுத்திருந்தனர்.
மேலும், போலியான அல்லது உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ப்ளூம்பெர்க் ஊடக நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜோகூர், பாரெஸ்ட் சிட்டியில், காசினோ சூதாட்ட மையத்தை அமைக்க, பெர்ஜயா குழுமத்தின் நிறுவனர் வின்சென்ட் டான் மற்றும் கெந்திங் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான் ஸ்ரீ லிம் கோக் தாய் ஆகியோரை பிரதமர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.