
ஜோகூர் பாரு, ஜூன்-3-ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10-ஆவது மாடியிலிருந்து, தனது பச்சிளம் பெண் குழந்தையை கீழே வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் 22 வயது பெண் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
கடந்த மே 2-ஆம் தேதி, அங்குள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாருக்குப் புகார் கிடைத்தது.
தீவிர விசாரணைக்குப் பிறகு, நேற்று மதியம் சுல்தானா அமினா மருத்துவமனை (HSA) வளாகத்தில் அந்தப் பெண்ணை போலீஸார் கைதுச் செய்தனர்.
குழந்தை உயிருடன் இருக்கும்போதே 10-ஆவது மாடியிலிருந்து வீசப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலைக் குற்றமாக கருதப்படாத மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக (Culpable homicide not amounting to murder) குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளம் தாய் பெண் மீது இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.



