
கோலாலம்பூர், ஜூலை-14 – JS-SEZ எனப்படும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பெருந்திட்டம் விரைவில் இறுதிச் செய்யப்படும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை நேற்று சந்தித்த பின்னர் அன்வார் இந்தத் தகவலைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள நேர்மறையான முன்னேற்றங்களை இரு நாடுகளும் வரவேற்றுள்ளன.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள சில முக்கியப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள பிற சிக்கல்களையும் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தொடர்ந்து தீர்ப்பதற்கு இருதரப்பும் தங்கள் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் சொன்னார்.
நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான பகிரப்பட்ட நன்மைகளின் அடிப்படையில் மலேசிய-சிங்கப்பூர் உறவுகள் மேலும் வலுப்படும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.



