
ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாலோ தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆறுமுகம் தற்போது நலமாக இருக்கிறார். டாக்டர் ரூபன் உடல் நிலை தேறி சீராக இருப்பதாக அவரின் தேர்தல் பிரச்சாரப் பிரிவு நிர்வாகி Abdul Majid Abdul Aziz உறுதிப்படுத்தினார். கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டாக்டர் ரூபன் தனது பிரச்சாரங்களை நேற்று ரத்து செய்தார்.
டாக்டர் ரூபன் நேற்று Kampung Gajah மற்றும் Kampung Sri Tambak ஆகிய இடங்களில் உள்ள முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்களுக்குச் செல்லவும், அப்பகுதியில் உள்ள வாக்காளர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், தண்டுவட விலகல் பிரச்னை காரணமாக கடுமையான முதுகுவலி ஏற்பட்டதாகவும், நிலைமை மோசமடைவதைத் தடுக்க ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தமக்கு ஆலோசனை கூறியதாகவும் டாக்டர் ரூபன் விளக்கினார்.
இவ்வேளையில் நேற்று நடைபெறவிருந்த பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். கடுமையான வலியால் அதனைத் தவிர்க்க முடியவில்லை. முதல் நாளிலிருந்தே, பல இடங்களுக்குச் சென்றது மற்றும் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் அடங்கிய தனது பரபரப்பான பிரச்சார அட்டவணையே இந்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் ரூபன் முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டார்.



