
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புக்குப் பின்னர், கடந்த வியாழக்கிழமை அச்சோதனை நடத்தப்பட்டது.
கைதான 117 பேரில் 47 பேர் மியன்மார் ஆடவர்கள், 65 பேர் மியன்மார் பெண்கள் மற்றும் 5 வங்காளதேச ஆடவர்கள் ஆவர்.
இவர்களின் வயது 19 முதல் 52 வரை என அதிகாரிகள் கூறினர்.
அனைவரும் செல்லுபடியாகும் பயணப் பத்திரங்களோ அல்லது வேலை பெர்மிட்டோ இல்லாமல் சட்டவிரோதமாக அங்கு வேலை செய்து வந்தது அம்பலமானது.
இதையடுத்து, அத்தொழிற்சாலையின் மனிதவள அதிகாரி ஒருவரும் விசாரணைக்காக கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அனைவரும் தற்போது Setia Tropika குடிநுழைவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



