ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-17, நாட்டின் மிகப் பழைமையான மிருகக்காட்சி சாலையான ஜோகூர் மிருகக்காட்சி சாலை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி மீண்டும் பொது மக்களுக்குத் திறக்கப்படுகிறது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃவிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) அந்நற்செய்தியை அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மிருகக்காட்சி சாலையின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவுக்கு மாநில இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சிறப்பு வருகைப் புரிவார்.
ஜோகூர் அரண்மனையின் வளர்ப்பு விலங்குகளான வரிப் புலி, தாபீர், சூரியக்கரடி போன்றவை மிருகக்காட்சி சாலைக்குப் பரிசாக கொடுக்கப்பட்டுள்ள தகவலையும் MB பகிர்ந்துக் கொண்டார்.
தரமுயர்த்தும் பணிகளுக்குப் பிறகு மிருகக்காட்சி சாலை மீண்டும் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக, ஒரு மாத காலத்திற்கு நுழைவுக் கட்டணத்தில் பெரியவர்களுக்கு 50 விழுக்காடு கழிவுச் சலுகை வழங்கப்படும்.
அதுவே சிறார்கள் என்றால் ஒரு மாதத்திற்கு நுழைவு இலவசம் என டத்தோ ஓன் ஹஃபிஸ் சொன்னார்.
சலுகைக் காலம் முடிந்ததும், பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக 10 ரிங்கிட்டும், சிறார்களுக்கு 5 ரிங்கிட்டும் விதிக்கப்படும்.
வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் 30 ரிங்கிட்டாகும்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மிருகக்காட்சி சாலை திறந்திருக்கும்; கடைசி டிக்கெட் மாலை 5 மணிக்கு விற்கப்படும்.
யானை, புலி, ஒட்டகம், முதலை உள்ளிட்ட 275 விலங்குகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜோகூர் பாரு மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஜோகூர் மிருகக்காட்சி சாலை 1928-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.