
டெங்கில், அக்டோபர்-4 – சிலாங்கூர், டெங்கில் அருகே உள்ள கம்போங் டத்தோ அஹ்மாட் ரசாலியில் கண்டெடுக்கப்பட்ட 3 மோர்டார் குண்டுகளைப் போலீஸார் பாதுகாப்பாக அழித்துள்ளனர்.
வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ‘ரோரோ’ கழிவுத் தொட்டியில் இருந்து பழைய இரும்புப் பொருட்களைப் பிரித்துக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர், அந்தக் குண்டுகளைக் கண்டுபிடித்ததாக, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் (Norhisham Bahaman) கூறினார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
போலீஸ் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மேற்கொண்ட சோதனையில், அவை ஒரு 81 மில்லி மீட்டர் மற்றும் இரண்டு 60 மில்லி மீட்டர் மோர்டார் குண்டுகள் என்பது உறுதிச் செய்யப்பட்டது.
பின்னர் அவை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சனிக்கிழமைக் காலை 9.20 மணியளவில் டெங்கிலில் உள்ள திறந்த கட்டுமானப் பகுதியில் அழிக்கப்பட்டன.
5 நிமிடங்களில் நடவடிக்கை பாதுகாப்பாக நிறைவடைந்ததாகவும், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்குரிய வெடிப்பொருட்களைக் கண்டால் அவற்றைத் தொடவோ, நகர்த்தவோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்றும் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



