
கோலாலம்பூர், செப்டம்பர் 30 – 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளம் தொடர்பான வழக்கில், தாமான் ஸ்ரீ மூடாவைச் சேர்ந்த 50 குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெறப்போவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Shari) தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையான JPS, ஷா ஆலம் மாநகராட்சி (MBSA) மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட சில தரப்புகள் வெள்ளத்திற்கு காரணமான அலட்சியம் மற்றும் தவறுகளுக்கு கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படுமென்று அமிருடின் கூறினார். இதற்கிடையில், தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிள்ளான் ஆற்றைத் சுத்தப்படுத்தியதால் ஆற்றின் நீரைக் கொள்ளும் திறன் சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வெள்ளத் தடுப்பு பம்புகள் மற்றும் கதவுகள் தற்போது முறையாகச் செயல்படுகின்றன. கிள்ளான் ஆற்றின் விரிவான வெள்ளத் தடுப்புத் திட்டம் 2029 ஜனவரி 31ஆம் தேதிக்குள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றைத் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு மாநில அரசு 30 மில்லியன் முதல் 40 மில்லியன் ரிங்கிட் வரை செலவிட்டுள்ளது.



