பேங்காக் , நவ 13 – பல ஆண்டுகளாக போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்தில் இருந்து தன் மகனை விலக்கி வைக்க ஆசைப்படும் வயதான தாய் ஒருவர் , தன் வீட்டிலேயே சிறையை அமைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக போதைக்கு அடிமையான தனது மகனால் தொடர்ந்து அஞ்சி வாழ்ந்த , தன்னையும் தனது அண்டை வீட்டுக்காரரையும் பாதுகாப்பதற்கு அந்த நடவடிக்கையை தாய்லாந்தின் புரிராம் (Buriram ) வட்டாரத்தைச் சேர்ந்த 64 வயது பெண் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் அண்மையில் தனது 42 வயது மகனைப் பூட்டி வைப்பதற்காக குத்தகையாளர் மூலம் தனது வீட்டிற்குள் சிறை அறையை கட்டியிருக்கிறார். தனது மகன் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சியாக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். பல ஆண்டுகளாக போதைப் பழக்கத்தில் இருந்து தனது மகனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதில் நாடு முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட புனர்வாழ்வு மையங்களில் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் அடங்கும். வீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறையில் தனது மகனுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்து, உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க இரும்பு கம்பிகளுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தியுள்ளார். இரும்புகளால் தடுக்கப்பட்ட அறைகளில் படுக்கைகள், குளியலறைகள் மற்றும் வைஃபை போன்ற அத்தியாவசிய வசதிகளும் இருப்பதாக அந்த மாது தெரிவித்திருக்கிறார்.
மேலும் 24 மணி நேரமும் தனது மகனின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு CCTV ரகசிய கண்காணிப்பு கருவியையும் அவர் நிறுவியுள்ளார். இதனிடையே
மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோதமாக காவலில் வைத்தல் போன்றவற்றில் அந்த மாது குற்றவாளியாகக் கண்டறியப்படலாம் என்று ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.