
பேங்காக், செப்டம்பர் 24 – மலேசிய எல்லையை ஒட்டியுள்ள தாய்லாந்தின் தென்பகுதியில் மூன்று மாகாணங்களில், இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் சுமார் 100 மில்லியன் பாட் அதாவது 12.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிலங்களை வாங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தாய்லாந்தின் உள்துறை துணை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலங்கள் யாருடையது, அவற்றை வாங்கியதன் நோக்கம் என்ன, நிதி எங்கிருந்து பெறப்பட்டது என்பதைக் கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட தகவலின்படி, யூதர்களுக்கான சமூக மற்றும் மத மையமான ‘சபாட்’ (Chabad) மையங்களை அமைப்பதற்காக இந்த நிலங்கள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தாய்லாந்து முழுவதும் உள்ள சுமார் 8 முதல் 9 சபாட் மையங்களில் நில உரிமை, நிதி ஆதாரம் மற்றும் அங்கு நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. சில மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதுடன், மேலும் சில கட்டுமானத்தில் அல்லது திட்டமிடப்பட்ட நிலையில் உள்ளன.
நிலம் வாங்கிய நிறுவனங்களில் கல்லறைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையின் வரம்பை தீர்மானிக்க சிறப்பு புலனாய்வுத் துறையுடன் (DSI) கலந்துரையாடவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



