Latestஇந்தியா

திமுகவின் 3 தலைமுறைகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆக்ரோஷமாக சீறிய விஜய்; ‘சினிமா வசனம்’ என விமர்சனம்

சென்னை, செப். 8 – திரைப்படங்களில் ‘பஞ்ச்’ வசனங்களால் ரசிகர்களை ஈர்த்த விஜய், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முற்றிலும் வேறொரு ஆவேச முகத்தைக் காட்டி சீறியிருக்கிறார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாகத் தொடங்கிய முதலமைச்சர் விஜய்-யின் பேச்சு, ஆக்ரோஷமாக மாறி ஒரு கட்டத்தில் திமுகவுக்கு எதிரான கடுமையான ஊழல் தாக்குதலாக உருவெடுத்தது.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்திலிருந்து மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரை மூன்று தலைமுறைகளைக் குறிவைத்து விஜய் பேசிய விதம் சட்டப்பேரவையையே பரபரப்பாக்கியது.

1970-களின் வீராணம் திட்டம் தொடர்பான சர்க்காரியா ஆணைய அறிக்கையைக் கையில் எடுத்த விஜய், கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் தொடர்பான பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுப்பினார்.அதோடு நிற்கவில்லை.

அமலாக்கத்துறை – ED ஆவணங்களை மேற்கோள்காட்டி, அரசாங்க ஒப்பந்தங்களில் 7.5 முதல் 10 விழுக்காடு வரை ‘party fund’ அதாவது கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் பெயர்களையும் நேரடியாக முன்வைத்தார். இவை ED ஆவணங்களில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் என்றும் விஜய் வலியுறுத்தினார்.

இதில் அதிக கவனம் ஈர்த்தது ‘Karur Gang’ என்ற வார்த்தை.

டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் வழியாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வலையமைப்பை ED ‘Karur Gang’ என குறிப்பிட்டிருப்பதாகக் கூறிய விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாகச் சாடினார்.

“தவறைக்கூட ஒழுங்கமைத்துச் செய்திருக்கிறார்கள்” என்ற தொனியில் பேசிய அவர், இதனை திமுக ஆட்சியின் ‘Scientific Corruption’ என்றும் வர்ணித்தார்.

விஜய்யின் குரல் உயர உயர, திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பும் அதிகரித்தது. உதயநிதி பதிலளிக்க அனுமதி கோர, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையைச் சூழ்ந்து எதிர்ப்பு தெரிவித்து, இறுதியில் வெளிநடப்பும் செய்தனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே விமர்சனங்களும் அதே அளவு கடுமையாக இருந்தன.

விஜய்யின் பேச்சை “சினிமா பாணி நடிப்பு”, “மனப்பாடப் பேச்சு” என உதயநிதி விமர்சித்தார். சட்டப்பேரவையை விஜய் சினிமா மேடையாக மாற்றிவிட்டதாக திமுகவினர் சாடினர்.

திமுக மட்டுமின்றி அதிமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்தும், சட்டப்பேரவையில் அரசியல் ‘பஞ்ச் டயலாக்’ தேவையா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மறுபுறம், விஜய் ஆதரவாளர்கள் இதனை அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான சட்டப்பேரவை உரைகளில் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர். சமூக ஊடகங்களிலும் அவரது ஆவேசப் பேச்சின் காணொளித் துணுக்குகள் தீவிரமாகப் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!