
கோலாலாம்பூர், மே-30-பிரபல முன்னணி நட்சத்திரங்களான Sarimah Ibrahim, டத்தோ Adi Putra, Hisham Hamid ஆகியோர் நடிப்பில் வெளியான ‘Konspirasi’ என்ற உள்ளூர் அதிரடித் திரைப்படம், திரையரங்குகளில் இருந்து திடீரென மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மே 21-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 120 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், ஒரே வாரத்தில் திடீரென நிறுத்தப்பட்டது குறித்து இரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS தற்போது விளக்கமளித்துள்ளது.
அரசாங்கத்தின் தணிக்கையோ அல்லது எவ்வித தடையோ இதில் விதிக்கப்படவில்லை.
மாறாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான Elepfilm Entertainment விடுத்த சொந்த கோரிக்கையின் பேரிலேயே திரையீடு நிறுத்தப்பட்டுள்ளதாக FINAS உறுதிப்படுத்தியது.
படத்தின் முன்னணி நடிகை Sarimah Ibrahim இந்த திடீர் முடிவை “அதிர்ச்சியளிக்கிறது” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, தயாரிப்பாளர் இந்த திடீர் முடிவை எடுத்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து FINAS தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘Konspirasi’ படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



