Latestமலேசியா

தீபாவளியையொட்டி நவம்பர் 4 முதல் 10 வரை 11 பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் – தேங்காய்ப்பாலும் உருளைக்கிழகும் புதியாகச் சேர்க்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், அக்-29-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 4 முதல் 10ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஒன்பது பொருட்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், இவ்வாண்டு தேங்காய்ப்பால் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரிய சிவப்பு வெங்காயம், இந்தியச் சிறிய வெங்காயம், ரோஸ் வகை சிறிய வெங்காயம், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி, ஆஸ்திரேலிய பருப்பு, முழுத் தேங்காய், துருவிய தேங்காய், தக்காளி, தேங்காய்ப்பால் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.

இந்த விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் பண்டிகைக்கு முன் நான்கு நாட்கள், பண்டிகை நாள் மற்றும் அதற்குப் பின் இரண்டு நாட்கள் என மொத்தம் ஏழு நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வணிகர்கள் மற்றும் தொழில்துறையினரின் ஒத்துழைப்பு அவசியம். நாடு முழுவதும் 600 சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட வியூகக் கூட்டாளிகள் அமைச்சுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதில் ‘Jualan Rahmah Madani’ மலிவு விலை விற்பனைத் திட்டமும் அடங்கும் என அமைச்சர் கூறினார்.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான விலை ஒப்பீட்டின்படி, தீபகற்ப மலேசியாவில் முழுத் தேங்காய், துருவிய தேங்காய், பெரிய சிவப்பு வெங்காயம், இந்தியச் சிறிய சிவப்பு வெங்காயம் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு ஆகிய ஐந்து பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. தக்காளி, சிவப்பு மிளகாய் மற்றும் ரோஸ் வகைச் சிறிய வெங்காயத்தின் விலைகளில் மாற்றமில்லை.

சபாவில் பெரிய சிவப்பு வெங்காயம் மற்றும் ஆஸ்திரேலியப் பருப்பு ஆகியவற்றின் விலைகள் இறக்கம் கண்டுள்ளன. அரசாங்க மானியங்களுடன் விற்பனையாளர்கள் வழங்கும் கூடுதல் தள்ளுபடிகளும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவுவதாக Armizan குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!