
கோலாலம்பூர், அக்-29-நாடு முழுவதும் 82,126 ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட உளநல மதிப்பீட்டில், 691 ஆசிரியர்களுக்கு உடனடி உளவியல் ஆதரவு தேவைப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்திருக்கிறார்.
636 ஆசிரியர்கள் மிதமான நிலையிலும், 32 பேர் மிதமான-குறைந்த நிலையிலும், 23 பேர் குறைந்த நிலையிலும் இருப்பது அந்த உளநல மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வெண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த ஆசிரியர்களில் 0.84 விழுக்காடாகும். அதேவேளை, 99.16 விழுக்காட்டினர் நல்ல உளநல நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் ஆதரவு தேவைப்படும் ஆசிரியர்களுக்கு தனிநபர் மற்றும் குழு ஆலோசனைகள், உளவியல் மதிப்பீடுகள், வழிகாட்டுதல், மன அழுத்த நிர்வாகத் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை அமைச்சு வழங்கி வருகிறது. நிதி நிர்வாகம், கடன் சுமை, பணித்திறன் மற்றும் மனநலம் தொடர்பான கவலைகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் Fadhlina கூறினார்.
நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளும் ஆசிரியர்களைச் சமநிலைப்படுத்தி, தங்களுக்கான ஆதரவு வளங்களைக் கண்டறிந்து, இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் நடவடிக்கைகளையும் அமைச்சு முன்னெடுத்து வருகிறது. உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், ஆசிரியர்கள் நீண்டகாலமாகத் தங்கள் நல்வாழ்வைப் பேணவும், பணியைத் திறம்படத் தொடரவும் இம்முயற்சிகள் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வேளையில், ஆசிரியர்களின் பணிச்சூழலை மேம்படுத்த, ஆசிரியர் அறைகளைச் சீரமைக்க 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி அடங்குவதாகவும் Fadhlina குறிப்பிட்டார். மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளுடன் வசதியான பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம் ஆசிரியர்களின் உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வை வலுப்படுத்தவும், அவர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் முடியும் என்றாரவர்.



