
கோலாலம்பூர், அக்-29-கல்வி அமைச்சின் முயற்சியின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 329,414 ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்திருக்கிறார்.
அனைத்து ஆசிரியர்களும் கல்வியில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ளும் வரை அப்பயிற்சிகள் கட்டம் கட்டமாகத் தொடர்ந்து வழங்கப்படும். ஆசிரியர்களின் துறை சார்ந்த தேவைகள் மற்றும் பொதுவான திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமன்றி ஏனைய துறைகளின் ஆசிரியர்களையும் அது உட்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தின்போது பேசிய Fadhlina, கல்வியில் AI பயன்பாடு கட்டுப்பாடான மற்றும் அறநெறி சார்ந்த முறையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் DELIMa 3.0 தளத்திலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றாரவர்.
மேலும், 2027-ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் AI அடிப்படைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் AI மூலம் பெறும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதுடன், சந்தேகத்திற்குரிய பதில்களைக் கேள்வி கேட்டு, சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, STEM, நிரலாக்கம், ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஏற்கெனவே 1.5 மில்லியன் மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Fadhlina தெரிவித்தார்.



