
ஜோகூர் பாரு, அக்டோபர் 28 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, பயணிகள் மற்றும் அவர்களின் பயணப் பொதிகளுக்கான பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) கூறுகையில், தற்போது விமானப் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்தும் சோதனைகள், கடத்தல் பொருட்களையும் கண்டறியும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றார்.
இதற்காக உள்துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து 17 மேம்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவுள்ளன. குறிப்பாக, அதிக ஆபத்துள்ள நாடுகளுக்குப் பயணம் செய்வோர் மற்றும் அவர்களின் உடைமைகள் முழுமையாகச் சோதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜனவரி முதல் அக்டோபர் 15 வரை KLIA-வில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய 77 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 93 பேர் கைது செய்யப்பட்டதுடன், 202.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் (Hussein Omar Khan) தெரிவித்தார்.



