
மலேசிய ஆயுதப்படை, தனது வர்த்தக நிறுவனமான பெர்னாமா (Pernama) கடைகளில் வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த இந்தச் சலுகை, தற்போதுள்ள கையிருப்பு தீர்ந்ததும் முடிவுக்கு வருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படைத் தலைமை அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய பீர் கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 80 பெர்னாமா கடைகள் இயங்கி வருகின்றன. தற்போதைய கையிருப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி, முஸ்லிம் அல்லாத ராணுவப் பணியாளர்களும் முன்னாள் ராணுவ வீரர்களும் மாதத்திற்கு இரண்டு பெட்டிகள் வரை பீர் வாங்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு பெட்டியிலும் 48 கேன்கள் அல்லது பாட்டில்கள் இருக்கும். வழக்கமான சில்லறை விலையைவிட சுமார் 60 விழுக்காடு குறைவான விலையில் பீர் கிடைத்து வந்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை பெர்னாமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், விளக்கம் பெறுவதற்காக மலேசிய ஆயுதப்படையின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை அணுகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டத்தின்கீழ், ராணுவப் பணியாளர்களும் முன்னாள் ராணுவ வீரர்களும் பெர்னாமா கடைகளில் 308 அத்தியாவசியப் பொருட்களை 30 விழுக்காடு வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



