பெட்டாலிங் ஜெயா, மே 8 – வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பில், ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி செய்திருக்கும் போலீஸ் புகார் தொடர்பில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாக, DAP கட்சியின் முன்னாள் பிரதிநிதியான சதீஸ் முனியாண்டி கூறியுள்ளார்.
தாம் வரி செலுத்த தவறி விட்டதாக, சதீஸ் தமக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாக நேற்று சரஸ்வதி கூறியிருந்தார்.
அது தொடர்பில், சதீஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், அந்த குற்றச்சாட்டை சதீஸ் மறுத்துள்ள வேளை ; இரண்டு செய்தி இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு தாம் கருத்துரைத்ததாகவும், அவற்றில் ஒன்று துணையமைச்சரின் பெயரை பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு வருமான வரி வாரியத்தால் தடுப்புப்பட்டியலில் உள்ள ஒருவரை செனட்டராகவும், துணை அமைச்சராகவும் நியமிக்க முடியுமா என்பதை அறிய மலேசியர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.