Latestஉலகம்மலேசியா

தென் கொரியாவில் நிகழ்ந்த மோதலில் பலியான மலேசியர்: சண்டையை தடுத்து நிறுத்தவே முயன்றார் – சகோதரி விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை-27-தென் கொரியாவில் நிகழ்ந்த மோதலொன்றின் போது உயிரிழந்த நபர், அச்சண்டையைத் தடுத்து நிறுத்த உதவுமாறு நண்பர் ஒருவர் அழைத்ததாலேயே சம்பவ இடத்திற்குச் சென்றதாக அவரது சகோதரி தெரிவித்திருக்கிறார்.

தமது சகோதரர் Ahmad Shahவை உட்படுத்திய அச்சம்பவம் குறித்து, சம்பவ இடத்தில் இருந்த அவரது மனைவி மூலமாகவே தமக்குத் தெரிய வந்ததாக 25 வயதான Ain Sephia எனும் அப்பெண் கூறினார்.

தமது சகோதரர் தூங்கிக் கொண்டிருந்த போது சண்டை குறித்தும் அதைத் தடுத்து நிறுத்த உதவுமாறும் அவரது நண்பர் ஒருவர் அழைத்துள்ளார். அதன் பிறகு தமது சகோதரரும் அவரது மனைவியும் அங்கு சென்றுள்ளனர். அப்போது தமது சகோதரர் அங்கு மரணமடைந்ததாக Ain Sephia விளக்கினார்.

தென் கொரியாவில் இறுதிச் சடங்குக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால், Ahmad Shahவின் உடலை தாயகம் கொண்டு வந்து ரவாங்கில் நல்லடக்கம் செய்ய குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

Eumseong எனும் இடத்தில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட குழுச் சண்டையில் மலேசியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் முன்னதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

விசாரணைக்கு உதவும் வகையில் 40 வயது மதிக்கத்தக்க மலேசியர் ஒருவரையும் மேலும் சிலரையும் அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Ahmad Shah தென் கொரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொழிற்சாலையொன்றில் பணி புரிந்து வருகிறார். அவரது மனைவியும் உடன் இருந்துள்ளார்.

Ahmad Shah ஆகக் கடைசியாக 2023-இல் மலேசியா வந்திருந்தார். தினமும் தாயாரைத் தொடர்பு கொள்ளும் அவர் டிசம்பரில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!