புத்ராஜெயா, மே 24 – நாட்டின் சில பகுதிகளில் பருவமழையால் ஏற்படக்கூடும் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள, 10 million ரிங்கிட் நிதியை ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பேரிடர் நடவடிக்கைகளின் தேவைக்கு ஏற்ப, அந்த நிதி ஒதுக்கீடு ஒருங்கிணைக்கப்படுமென, நட்மா எனும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள, சமபந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களும், அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.
தென்மேற்கு பருவமழை காலத்தின் போது, சுகாதாரப் பிரச்சனைகள், தண்ணீர் தட்டுபாடு, காட்டுத் தீ, புகைமூட்டம் மற்றும் விவசாய விளைச்சல் குறைதல் உள்ளிட்ட சில எதிர்மறையான தாக்கங்களை நாடு எதிர்கொள்ள நேரிடலாம் என, இம்மாதம் 14-ஆம் தேதி, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாயிட் ஹமிடி கூறியிருந்தார்.
அதனால், பேரிடர் அபாயங்களை குறைக்க, அனைத்து பேரிடர் நிர்வாக முகமைகளும் தயார் நிலையில் இருக்க வேண்மெனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை காலத்தில், பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ள, தீயணைப்பு மீட்புப் படை, சுற்றுசூழல் துறை, சுகாதார அமைச்சு, வடிகால் நீர்பாசனத் துறை மற்றும் கனிம புவியியல் துறை உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக நட்மா கூறியுள்ளது.