
கோலாலம்பூர், ஏப்ரல்-23-மலேசியர்களின் கல்வி கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலகமான PNM, அதன் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி வருகிறது.
அவ்வகையில், மலேசியா மடானி கொள்கையின் ஒரு பகுதியாக, பொது மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இரண்டு புதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதலாவதாக, Quickbook2U@PNM என்ற புதிய முறையின் மூலம், பொது மக்கள் நூலகத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையம் வாயிலாக புத்தகங்களுக்கு முன்பதிவுச் செய்யலாம்.
இத்திட்டம் புத்தகங்களை நேரடியாக பயனர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியை வழங்குகிறது.
இதன் மூலம் நிர்வாகச் செலவுகள் குறைவதோடு, புத்தகங்கள் கையிருப்பில் உள்ளதா என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் முடியும்.
அடுத்ததாக, QuickKarel என்ற டிஜிட்டல் தளம் மூலம் நூலகத்தில் உள்ள வாடகை இடங்களை மிகவும் எளிதாகவும், வேகமாகவும் முன்பதிவுச் செய்யும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இத்தளத்தின் மூலம் அறைகள் காலியாக உள்ளதா என்பதை real-time எனப்படும் நிகழ்நேரத்தில் சரிபார்க்க முடியும்.
இந்த டிஜிட்டல் மாற்றங்கள் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதோடு, நூலகத்தை ஒரு நவீன அறிவு மையமாக மாற்றும் என, அமைச்சர் டத்தோ ஏரான் அகோ டகாங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நவீன காலத்திற்கு ஏற்ப நூலகச் சேவைகளை மேம்படுத்தி, வாசசிக்கும் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றார் அவர்.



