கிள்ளான், டிச 13 – கடந்த இரண்டு மாத காலமாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டதோடு காயம் விளைவித்ததாக இரண்டு சகோதரர்கள் உட்பட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.
26 வயதுடைய இளைஞரும் 21 வயதுடைய மற்றொரு இளைஞரும் கும்பலாக கடந்த அக்டோபர் 26ஆம் தேதிக்கும் நவம்பர் 18 ஆம் தேதிக்குமிடையே எட்டு பெண்களிடம் கொள்ளையிட்டதாக எட்டு குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. தாமான் செந்தோசா, பண்டார் புக்கிட் திங்கி, பண்டமாரான் மற்றும் பண்டார் கிளாங்கில் 23 முதல் 69 வயதுடைய பெண்களிடம் கொள்ளையிட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த இருவரும் காயம் விளைவித்ததாக தண்டனைச் சட்டத்தின் 394 ஆவது விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளும், 395ஆவது விதியின் கீழ் மேலும் நான்கு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டன. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுவரை சிறை ,அபராதம் மற்றும் பிரம்படியும் விதிக்கப்படலாம். 58 வயது பெண் ஒருவருக்கு சொந்தமான திருடப்பட்ட விவேக கைதொலைபேசியை வைத்திருந்ததாக தண்டனைச் சட்டத்தின் 412 ஆவது விதியின்கீழ் 26 வயது நபரின் மூத்த சகோதரரான 28 வயதுடைய நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவர் குற்றச்சாட்டு ஜனவரி 23 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.