திருச்சி, அக்டோபர்-12, தமிழகத்தின் திருச்சியிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசின் சார்ஜா புறப்பட்ட பயணிகள் விமானத்தில், சக்கரத்தை உள்இழுக்க முடியாமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், நேற்று மாலை இரண்டரை மணி நேரங்கள் விமானம் வானிலேயே வட்டமடித்த சம்பவம் பெரும் பீதியைக் கிளப்பியது.
விமானத்திலுள்ள எரிபொருளைக் குறைத்தால் மட்டுமே, தீ எதுவும் ஏற்படாமல் அதனை பத்திரமாகத் தரையிறக்க முடியும் என்பதால், திருச்சி – புதுக்கோட்டை எல்லையில் அந்த ஏர் இந்தியா விமானம் 26 முறை வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அச்செய்தி ஊடகங்களில் வெளியானது முதல், விமானத்திலிருந்த 141 பயணிகளும் பத்திரமாகத் தரையிறங்க வேண்டுமன்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பயணிகளின் குடும்பத்தாரும் உறவினர்களும் நம்பிக்கை இழக்காமல் வேண்டிக்கொண்டனர்.
எந்த சாத்தியத்தையும் எதிர்கொள்ள 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
18 அம்புலன்ஸ் வண்டிகள், 20 மருத்துவர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர்.
இந்நிலையில், எரிபொருள் குறைந்ததும், இரவு 8.30 மணி வாக்கில் விமானம் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
இதையடுத்து விமான நிலையத்தில் கூடியிருந்தவர்கள் பெரும் நிம்மதியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிகளுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரிடமுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைத் தொடங்கியுள்ளது.