
சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்-13- கடந்த மாதம் கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியின் கழிவறையில் சக மாணவியை அடைத்து வைத்து காயப்படுத்தியதாக, 13 வயது மாணவிகள் இருவர் இன்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
ஜூலை 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆறாமாண்டு மாணவர்களுக்கான கட்டடத்தின் கழிவறையில் இன்னொரு மாணவியைத் தாக்கியதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டு சிறையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
அதே நாளில் அதே நேரத்தில் அதே இடத்தில் சம்பந்தப்பட்ட மாணவியை அடைத்து வைத்ததாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அக்குற்றத்திற்கும் அதிகபட்சமாக ஓராண்டு சிறையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம். எனினும் இருவருமே குற்றச்சாட்டை மறுத்தனர்.
இதையடுத்து செப்டம்பர் 23-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
தலா 2,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, கழுத்தில் மாட்டும் டையால் கைக் கால்கள் கட்டப்பப்பட்டு, வாயில் கைக்குட்டை திணிக்கப்பட்ட நிலையில் அந்த முதலாம் படிவ மாணவி மீட்கப்பட்டார்.