கோலாலம்பூர், மே 21 – மலேசியாவில் நிகழ்ச்சி நடத்துவதற்காக, சிங்கப்பூரின் பிரபல நகைச்சுவை கலைஞர் ஷாருல் சன்னாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை, புஸ்பால் எனும் வெளிநாட்டு கலைஞர்களின் படப்பிடிப்பிற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் மத்திய நிறுவனம் இரத்து செய்ததற்கு, போலீஸ் புகார்களே காரணம்.
இனம், மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை உட்படுத்திய 3R விவகாரம் தொடர்பில், இதற்கு முன் ஷாருல் சன்னாவுக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் போலீஸ் புகார்களை அடிப்படையாக கொண்டே, அவரது அனுமதி இரத்துச் செய்யப்பட்டதாக, தொடர்புத் துறை அமைச்சர் பாஹ்மி பட்சில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஷாருல் சன்னாவுக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கும் தகவலை போலீசாரிடமிருந்து கண்டறிந்த புஸ்பால் அம்முடிவை எடுத்துள்ளது.
ஷாருல் சன்னா சம்பந்தப்பட்ட அல்லது அவரது நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் சில அண்மையில் வைரலாகியுள்ளன.
அந்த வீடியோக்கள், 3R விவகாரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக புகார்களும் செய்யப்பட்டுள்ளன.
அதனால், புஸ்பால் அம்முடிவை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக பாஹ்மி கூறியுள்ளார்.