
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் மன்னிப்பு கோரும் மனு மீதான முடிவு, மன்னிப்பு வாரியத்தின் அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
என்ற போதிலும், நீதிக்கான போராட்டம் தொடரும் என நஜீப்பின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் தெரிவித்துள்ளார்.
SRC International ஊழல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நஜீப், எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டில் இருந்து அனுபவிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதே சமயம் அரச மன்னிப்புக் கோரி கூட்டரசு மன்னிப்பு வாரியத்திடமும் அவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், மன்னிப்பு வாரியத்தின் நேற்றைய கூட்டத்தில் 65 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்தார்.
அதே சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
நஜீப்பின் மன்னிப்பு மனு காலவரையின்றி அடுத்தக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை எனக் கூறிய ரொஸ்மா, தாத்தாவை வரவேற்க ஆவலுடன் காத்திருந்த நஜீப்பின் பேரப்பிள்ளைகளை எப்படி சாமாதானம் செய்வதெனத் தெரியவில்லை என்றார்.
இருந்தபோதிலும், நம்பிக்கைத் தளராமல் நஜீப்பின் விடுதலைக்காகத் தொடர்ந்து எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கப் போவதாக அந்த முன்னாள் முதல் பெண்மணி கூறினார்.
இந்த ஒத்திவைப்பு பொதுவாக அம்னோவினரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், அடுத்த கூட்டத்தில் அவரின் மனு மீண்டும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



