
சென்னை, செப்டம்பர்-28,
பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது கட்டுங்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்னும் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இது இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மரணமடைந்தவர்களில் 5 சிறுவர்கள், 5 சிறுமிகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் ஆவர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரின் 2 சிறு வயது பெண் பிள்ளைகளும் அவர்களில் அடங்குவர்.
இதுவரை 30 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மருத்துவமனை வாசல்களில் உறவினர்கள் கதறியழும் காட்சிகள் இதயங்களை கலங்கடித்தன.
பாதுகாப்புக் கருதி உடனடியாக அங்கிருந்து புறப்பட்ட விஜய், பின்னர் X தளத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
இதயம் நொறுங்கி, தாங்க முடியாத – வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரும் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், கரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஆந்திராவில் கூட்ட நெரிசலில் சிக்கி இரசிகை இறந்தபோது, நடிகர் அல்லு அர்ஜூன் கைதானது போல விஜயும் கைதுச் செய்யப்படுவாரா என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர், அரசியல் நோக்கம் எதுவுமின்றி தற்போதைக்கு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை படியே பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுருக்கமாகக் கூறினார்.
பிரச்சாரத்தில் 10,000 பேர் கூடுவார்கள் எனக் கூறி விஜய் கேட்ட இடம் சிறியது என்றும், எனினும் கூடுதலாக இன்னோர் இடத்தையும் சேர்த்தே ஒதுக்கியதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், விஜய் வரத் தாமதமானதால் சுமார் 27,000 பேருக்கு மேல் கூடிவிட்டதால் நெரிசல் ஏற்பட்டு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் கூறியது.
இச்சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வலைத்தளவாசிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.