புத்ராஜெயா, டிசம்பர்-9 – நாட்டில் செப்டம்பரில் 16.69 மில்லியன் பேராக இருந்த வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை, அக்டோபரில் 0.2 விழுக்காடு அதிகரித்து, 16.72 மில்லியன் பேராக பதிவாகியுள்ளது.
அதே சமயம் வேலையில்லாதோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து குறைந்து வருவதாக, தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.
செப்டம்பரில் 555,300 பேர் வேலையில்லாமல் இருந்த நிலையில், அக்டோபரில் அவ்வெண்ணிக்கை 551,400 பேராகக் குறைந்ததாக, அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ Dr மொஹமட் உசி’ர் மஹிடின் (Datuk Seri Dr Mojd Uzir Mahidin) கூறினார்.
எனினும், வேலையில்லா திண்டாட்ட விகிதம் 3.2 விழுக்காடாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சொந்த வேலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
செப்டம்பரில் 3.09 மில்லியன் பேர் சொந்த வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், அக்டோபரில் அவ்வெண்ணிக்கை 0.3 விழுக்காடு உயர்ந்து 3.10 மில்லியன் பேராகப் பதிவாகியது.
அதே சமயம் வேலையில்லாமல் இருப்போரில் 79.8 விழுக்காட்டினர் தீவிரமாக வேலைத் தேடி வருகின்றனர்.
இவ்வேளையில், 15 முதல் 24 வயது இளையோர் மத்தியிலான வேலைத் திண்டாட்ட விகிதம், செப்டம்பரை விட அக்டோபரில் 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.
எனினும், 15 முதல் 30 வரையிலானவர்கள் மத்தியிலான வேலைத் திண்டாட்ட விகிதத்தில் மாற்றமில்லை; 6.3 விழுக்காடாகவே அது நீடிக்கிறது.