
ஷா ஆலாம், அக்டோபர்-18 – கல்வத் குற்றத்திற்காக, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையால் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டை 3 மாதங்களுக்கு அனைத்து அதிகாரப்பூர்வ கட்சி நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்வதாக, பெர்சாமா கட்சி அறிவித்துள்ளது.
இந்த இடைநீக்கம் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
கடந்த வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில், திருமண உறவில்லாத பெண் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நிக் நஸ்மி கைதுச் செய்யப்பட்டார்.
அதனை உறுதிப்படுத்திய அவர், தமது தவறான முடிவுக்காக குடும்பத்தினரிடமும் கட்சியினரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
எனினும், சம்பந்தப்பட்ட பெண்ணுடன் எந்தவொரு ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபடவில்லை என அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, நிக் நஸ்மியின் கைதுக்குப் பின்னணியில் பி.கே.ஆர் கட்சி இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.
அரசியல் எதிரிகளைச் சிக்கவைப்பது குறித்து பி.கே.ஆர் தலைவர்கள் ஒருபோதும் ஆலோசித்ததில்லை என்றும், கட்சிக்கு அதைவிட முக்கியமான பணிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையிலேயே நிக் நஸ்மி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் விளக்கமளித்துள்ளது.



