
புத்ராஜெயா, ஜூலை-30-2010 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில், தாபோங் ஹஜி (Tabung Haji) நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தபோதிலும், அதன் ஊழியர்களுக்கு 2 முதல் 13 மாதங்கள் வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக, நேற்று வெளியான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
2014-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு சிறப்பு போனஸுக்காக மட்டும் அந்த நிறுவனம் 74 மில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளது.
தேசிய தணிக்கைத் துறை உறுதிப்படுத்தியபடி, தாபோங் ஹஜியின் சொத்து மதிப்பை விட கடன்கள் அதிகமாக இருந்த காலக்கட்டத்திலேயே இந்த அளவுக்கு அதிக போனஸ் வழங்கப்பட்டுள்ளது என்று RCI சுட்டிக்காட்டியுள்ளது.
அக்காலத்தில் ஈட்டப்பட்ட இலாபத்தைக் காரணம் காட்டி இந்த போனஸ் வழங்கப்பட்டாலும், அமைப்பின் நிதி நிலையை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இது தவறான நடவடிக்கை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட போனஸ் தொகையைத் திரும்பப் பெற முயற்சிக்குமாறும், இனி இதுபோன்ற அதிகபட்ச போனஸ் வழங்கும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இந்த RCI அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



