கோலாலம்பூர், ஜூன் 19 – விமானப் பராமரிப்பு நிறுவனத்தின் முன்னாள் முதுநிலை மேலாளர் ஒருவரின் நிலையான ஒப்பந்தம் முடிவடைந்ததைக் காரணம் காட்டி, வேலையிலிருந்து அவரை அநியாயமாக பணிநீக்கம் செய்த நிறுவனம், அவருக்கு 11 லட்சம் ரிங்கிட்டை(RM1.1 million) இழப்பீடாக வழங்க வேண்டுமென, தொழில்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈராயிரத்தாம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையில், 20 ஆண்டு காலம் வேலைக்கான வருடாந்திர ஒப்பந்தம் வழங்கப்பட்ட போதிலும், Fawaid Daud, Airod நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர்,1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு முதலாம் தேதி தொடங்கி, ஆயிரத்து 300 ரிங்கிட் சம்பளத்தில், அந்நிறுவனத்தின் நிரந்திர பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
சிறந்த சேவை அடிப்படையில், 1993-ஆம் ஆண்டு, அவருக்கு துணை நிர்வாகியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இப்படி 32 ஆண்டுகளாக டாவுட் அந்நிறுவனத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளார்.
எனினும், 2020-ஆம் ஆண்டு, டிசம்பர் 21-ஆம் தேதி, ஒப்பந்தம் காலாவதியாவதை காரணம் காட்டி Airod நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்தது.
அதனால், டாவுட்டை பணிநீக்கம் செய்ய, அந்நிறுவனம் முன் வைத்துள்ள காரணம் வெறும் சாக்கு போக்கே. அதனை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூப்பிக்க நிறுவனம் தவறிவிட்டது என நீதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, அவருக்கு ஊதிய இழப்பீடாக நான்கு லட்சத்து 87 ஆயிரத்து 368 ரிங்கிட்டும், பொது இழப்பீடாக ஆறு லட்சத்து 49 ஆயிரத்து 824 ரிங்கிட்டையும் Airod நிறுவனம் வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.