
நியூயார்க், ஆகஸ்ட் 28-கடந்த மார்ச் மாதம் நியூயார்க்கின் LaGuardia விமான நிலையத்தில் Air Canada ஜெட் விமானமும் தீயணைப்பு வாகனமும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் புதிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்கோர விபத்துக்கு முன், இரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் பணி நேரம் முடிவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே புறப்பட்டு விட்டதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அதனால் விபத்துக்கு முன், கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி நிகழ்ந்த அவ்விபத்தில், விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, தீயணைப்பு வாகனமொன்று அப்பாதையைக் கடந்ததால் பெரும் மோதல் ஏற்பட்டது. அதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது விமான நிலையம் வழக்கத்தை விட இருமடங்குக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டதாகவும் கூறப்படுகிறது.
விமானம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு வாகனம் ஓடுபாதையைக் கடக்க அனுமதிக்கப்பட்டது முக்கியத் தவறுகளில் ஒன்றாகும் என விசாரணையின் ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன. அதோடு, தகவல் தொடர்பு குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு வாகனம் மோதும் அபாயத்தை கட்டுப்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கும் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி இல்லாததும் விபத்துக்கான காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்விபத்து 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு LaGuardia விமான நிலையத்தில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு விபத்தாகும். இதனிடையே, முன்கூட்டியே பணியை முடித்துக் கொண்டுச் சென்றதாகக் கூறப்படும் இரு கட்டுப்பாட்டாளர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகம் FAA நடவடிக்கை எடுத்து வருகிறது.



