
ஜூலை 3 – பிகேஆர் துணைத்தலைவரும், முன்னாள் பெர்மாத்தாங் பாவ் எம்.பியுமான நூருல் இஸா, இந்திய சமூகத்தின் வளர்ச்சி தொடர்பாக பின்னணியில் செயல்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், அவரது அந்த நடவடிக்கைகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
சமூக, பொருளாதார துறைகளில் இந்தியர்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்க, பிகேஆர் மற்றும் அதன் தலைவர் அன்வார் இப்ராஹிமும் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இந்தியர்களுக்காக இதுவரை உருவாக்கவில்லை என்பது வருத்தமான உண்மை என பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார்.
13-வது மலேசிய திட்டத்தில் இந்தியர் மேம்பட்டுக்கான பரிந்துரைகள் தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் சார்ல்ஸ் சாண்டியாகோ, நூருலின் உரையை வாசித்ததைக் கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தேன். நூருலின் உரையில் இந்தியர்கள் நலனுக்காக சில முயற்சிகள் எடுத்ததாகக் கூறப்பட்டாலும், அதற்கான விளைவுகள் எதுவும் இல்லை.
இந்தியர்கள் இரண்டாம் தரப்பினராகவே நடத்தப்படுகின்ற இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் ஒருவராக இருந்தால், நூருல் உரிமைகள், பாகுபாடு மற்றும் அரசியல் நடத்தை பற்றி நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும்.
அவரது “அப்பாவி தோற்றத்தை”தவிர்த்து, நேர்மையான செயல்பாடுகளால் மட்டுமே இந்திய சமூகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்றார் ராமசாமி.