
கோலாலம்பூர், அக்டோபர்-15,நெகிரி செம்பிலான் மாநில அரச அரியணை தொடர்பான சர்ச்சையில் வெளியார் தலையிடவோ, அதனை அரசியலாக்கவோ கூடாது என மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் சட்ட விதிமுறைகள் மற்றும் மாநிலத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் சார்பில், அரச முத்திரைக் காப்பாளர் தான் ஸ்ரீ சையிட் டேனியல் சையிட் அஹ்மாட் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரும், அரசியல் ஆதாயம் தேடுவதற்கோ, செல்வாக்கை அதிகரிப்பதற்கோ, அதிகாரப் போராட்டத்திற்கோ இவ்விவகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1959-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சாசனம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற கருத்துகள் பதற்றத்தை அதிகரிப்பதுடன், அரசக் கட்டமைப்பின் கண்ணியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மலாய் ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



