Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பின் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்; அன்வாரின் கருத்துக்கு சாஹிட் ஆதரவு

சிரம்பான், ஆகஸ்ட்-1-இன்று நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூற்றை, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் சாஹிட் ஹமிட் ஆமோதித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் காலத்தில் அரசியல் போட்டிகளும் காரசாரமான கருத்து வேறுபாடுகளும் இயல்புதான்; ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தலைவர்கள் மக்களின் நலன் மற்றும் நாட்டின் நிலைத்ததன்மையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என, பாரிசான் நேஷனல் தலைவருமான சாஹிட் குறிப்பிட்டார்.

​ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனல் தொடர்ந்து வலுவான ஒத்துழைப்பை அளிக்கும் என்பதை உறுதிப்படுத்திய அவர், தேர்தல் மோதல்களைத் தொடர்ந்து நீட்டிக்காமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆட்சிமுறைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து அரசியல் பூசல்களில் ஈடுபடுவது நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்தாலும், கடந்த மாத ஜோகூர் தேர்தலிலும் இந்த நெகிரி தேர்தலிலும் பாரிசானும் பக்காத்தான் ஹராப்பானும் தனித்தனியாக களம் கண்டு, பிரச்சார மேடைகளில் அதன் தலைவர்கள் காரசாரமாக மோதி வந்தது குறிப்பிடத்தக்கது.

36 தொகுதிகளுக்கான இன்றையத் தேர்தல் முடிந்த கையோடு அரசியல் சூடும் தணியுமா அல்லது தீவிரமடையுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!