
சிரம்பான், மே-6-நெகிரி செம்பிலானில் நிலவி வரும் அரசியல் மற்றும் மாநில அரசியலமைப்புச் சாசன நெருக்கடி புதியக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரே நாளில் இரண்டு முக்கிய நகர்வுகள் அரங்கேறியுள்ளன.
முதலாவதாக, மாநிலத்தின் பாரம்பரியத் தலைவர்களான மூன்று ‘உண்டாங்’கள் (Undangs) மற்றும் முன்னாள் சுங்கை ஊஜோங் உண்டாங் டத்தோ ஸ்ரீ Mubarak Dohak ஆகியோர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.
ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற ‘Dewan Keadilan’ கூட்டத்தின் குறிப்புகளை வழங்கக் கோரி அவர்கள் சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
7 நாட்களுக்குள் அந்தக் கூட்டக் குறிப்புகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் அந்நால்வரும் வழக்கு மனுவில் கூறியுள்ளனர்.
உண்டாங் என்ற வகையில் அந்தக் கூட்டக் குறிப்புகளைப் பெற தங்களுக்கு உரிமை இருப்பதாக அந்நால்வரும் கூறிக் கொண்டனர்.
ஸ்ரீ மெனான்தி அரண்மனையில் நடைபெற்ற அந்த ஏப்ரல் 17 கூட்டத்தில் தான், Mubarak Dohak உண்டாங் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உறுதிச் செய்யப்பட்டது.
Undang தொடர்பான உச்சப்பட்ச அதிகார மையம் தான் இந்த Dewan Keadilan ஆகும்.
நெகிரி சமஸ்தானாதிபதியின் பதவி நீக்கம் தொடர்பான சர்ச்சையில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையில், மாநில அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த கோலாலம்பூரில் PH-அம்னோ தலைவர்களிடையே அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதற்குத் தலைமையேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ‘உணர்வுப்பூர்வமான’ அனைத்து முடிவுகளும் இனி ‘PH-UMNO கூட்டுத் தலைமைத்துவ மன்றத்தின்’ பரிந்துரைக்கே அனுப்பப்படும்.
அண்மையில் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டதால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தங்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைக் காக்கவும் இரு தரப்பும் உறுதியளித்துள்ளன.
இதையடுத்து நெகிரி மாநில ஒற்றுமை அரசாங்கம் இப்போதைக்குத் தலைத் தப்பியுள்ளது…



