
கோலாலம்பூர், செப். 22-நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவும் நெருக்கடி சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என துணைப்பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்திருக்கிறார். சட்டம் மற்றும் அரசியலமைப்புடன் பாரம்பரிய அமைப்புகளும் நடைமுறைகளும் மதிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
தாமும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமும் Yang Dipertuan Besar Tuanku Muhriz Tuanku Munawirரைச் சந்திக்க அழைக்கப்படவில்லை. அச்சந்திப்பு குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்ததாக Zahid குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் விவகாரம் வெறும் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் மட்டும் அணுகப்படக்கூடாது. மாநில அரச குடும்ப நிறுவனம் மற்றும் நிலைநாட்டப்பட்ட பாரம்பரிய நடைமுறைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நெருக்கடி முறையாகவும் சுமூகமாகவும் தீர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று Changkat Persekutuanனில் உள்ள நெகிரி செம்பிலான் அரண்மனையில் Tuanku Muhrizசைச் சந்தித்துப் பேசினார். மாநிலத்தில் அரசியல் நெருக்கடியும் அரச குடும்பம் தொடர்பான பல விவகாரங்களும் நிகழும் நிலையில் அச்சந்திப்பு நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக ரத்து செய்வதாக Tuanku Muhriz இரு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிப் பிரமாணத்தை மீறியது உறுதி செய்யப்பட்ட பின்னரே அம்முடிவு எடுக்கப்பட்டது. நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் (1959) பிரிவு XXXVIII(5)-இன் படி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் Yang Dipertuan Besarரின் விருப்பத்தின் பேரிலேயே அப்பதவியை வகிக்கிறார்கள் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அது குறித்து பேசிய மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம், மந்திரி பெசாரின் ஆலோசனை அல்லது கோரிக்கை இன்றி ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்குவது அல்லது பணி நீக்கம் செய்வது சட்டப் பிழை என்றும் அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



