நெகிரி செம்பிலான் மன்னராட்சி நெருக்கடி முந்தைய அரசிடமிருந்து தொடரும் பிரச்சினை; மன்னரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை – இஸ்மாயில் லாசிம்

சிரம்பான், செப்டம்பர் 24 – நெகிரி செம்பிலானில் தற்போது நிலவும் Adat அதாவது மாநில பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் மன்னர் நிறுவனங்கள் தொடர்பான நெருக்கடி, தற்போதைய மாநில அரசால் உருவானது அல்ல என்றும், முந்தைய அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்த பிரச்சினை என்றும் மந்திரி பெசார் டத்தோ ஹாஜி இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.
முந்தைய மந்திரி பெசார், மாநில அரசியலமைப்புச் சட்டம் 1959-ன் கீழ் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை முறையாக மேற்கொள்ளத் தவறியதால் பிரச்சினை நீடித்ததாக அவர் கூறினார்.
யாங் டி-பெர்துவான் பெசாரை மாநில அரசோ அல்லது மந்திரி பெசாரோ பதவியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுவது தவறானது என்றும் இஸ்மாயில் தெளிவுபடுத்தினார்.
நெகிரி செம்பிலானின் தனித்துவமான மன்னராட்சி முறை Adat Perpatih மற்றும் மாநில அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
யாங் டி-பெர்துவான் பெசாரைத் தேர்ந்தெடுப்பதில் நான்கு Undang-களுக்கு குறிப்பிட்ட பங்கு உள்ளதால், மந்திரி பெசார் அல்லது மாநில நிர்வாகக் குழுவுக்கு தனிப்பட்ட முறையில் மன்னரைத் தேர்வு செய்யும் அல்லது பதவியிலிருந்து அகற்றும் அதிகாரம் இல்லை என்றார்.
இந்த விவகாரத்தை மாநில அரசுக்கும் அரண்மனைக்கும் இடையிலான அரசியல் மோதலாக சித்தரிக்கக் கூடாது என்றும், நடைமுறை, அதிகார வரம்பு மற்றும் பாரம்பரிய நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் மாநில அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மை ஆணையும் மதிக்கப்பட வேண்டுமென இஸ்மாயில் தெரிவித்தார்.
மாநில நிர்வாகத்தைத் தடுக்கவோ முடக்கவோ கூடாது என்றும், சட்டப்படி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் எடுக்கும் இறுதி முடிவுகளை மாநில அரசு மதிக்கும் என்றும் அவர் கூறினார்.
“பிள்ளை இறந்தாலும் பரவாயில்லை; பாரம்பரியம் அழியக்கூடாது” என்ற நெகிரி செம்பிலான் பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், பாரம்பரிய நடைமுறைகள், அரசியலமைப்புச் சட்டம், மக்களின் ஆணை மற்றும் மன்னர் நிறுவனங்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



