காட்மண்டு, ஆகஸ்ட்-24 – இந்தியாவின் உத்தர பிரதேசத்திலிருந்து 40 பேருடன் சென்ற சுற்றுலா பேருந்து, நேப்பாளத்தில் ஆற்றில் விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
16 பேர் காயங்களுடன் தப்பிய நிலையில் மற்றவர்களைக் காணவில்லை.
இந்தியாவில் பதிவுச் செய்யப்பட்ட அப்பேருந்து, சுற்றுலா நகரான பொக்காராவிலிருந்து (Pokhara) 40 பேருடன் தலைநகர் காட்மண்டுவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் மீட்புப் பணியில் இணைந்துள்ள போலீசும் இராணுவமும் நீண்ட உலோக ஏணிகளில் ஆற்றிலிறங்கி, காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் கயிறுகளைக் கட்டி வெளியே இழுத்து வருகின்றன.
வேகமாக ஓடும் ஆற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் சோர்வுற்ற பெண்களும் குழந்தைகளும் கிடக்கின்றனர்.
ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் நிலையிருந்த ஒரு குழந்தையை, மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருந்து மீட்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
மலைப் பிரதேசமான நேப்பாளத்தில் சாலைகள் பெரும்பாலும் குறுகலாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதால், வளைவெடுப்பது பெரிய வாகனங்களுக்குச் சவாலாக விளங்கி வருகிறது.