ஜெம்போல், நவம்பர்-5 – நெகிரி செம்பிலான், ஜெம்போலைச் சேர்ந்த ஓர் ஆசிரியை, சமூக ஊடகத்தில் வந்த இல்லாத ஒரு பகுதி நேர வேலை விளம்பரத்தை நம்பி 80,000 ரிங்கிட்டை பறிகொடுத்திருக்கிறார்.
செப்டம்பர் 8-ஆம் தேதி முகநூல் விளம்பரத்தைப் பார்த்து கவரப்பட்டவருக்கு, டெலிகிராம் வாயிலாக ஒருவர் அறிமுகமானார்.
இலாப ஈவை அடிக்கடி சரிபார்த்துகொள்ள இணைய கணக்கைத் திறக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட 57 வயது அந்த ஆசிரியையிடம், கொடுக்கப்படும் சில வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், செய்து முடிக்கும் வேலைக்கான புள்ளிகளை அதிகரிக்க விரும்பினால் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்துள்ளது.
அவரும் முன்பின் யோசிக்காமல் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 13 தடவையாக மொத்தம் 80,111 ரிங்கிட்டை மாற்றியிருக்கிறார்.
போட்டப் பணத்திற்கான வட்டியை எடுக்க முயன்ற போதெல்லாம், சந்தேக நபர் சாக்குப்போக்கு கூறி இவரை அலைக்கழித்துள்ளார்.
இந்நிலையில் கடைசியாக அக்டோபர் 30-ஆம் தேதி 5,000 ரிங்கிட்டை கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றிய போதே, தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து 5 பிள்ளைகளுக்குத் தாயான அம்மாது போலீசில் புகார் செய்தார்.